திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அதிமுகவால் தான் முடியும்: ராஜேந்திர பாலாஜி

திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.;

Update:2024-10-18 11:22 IST

விருதுநகர்,

திருத்தங்கலில் எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் நடைபெற்ற அதிமுக 53-ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

லட்சக்கணக்கான தொண்டர்களின் வியர்வையிலும், ரத்தத்திலும் மலர்ந்த மலர்தான் அதிமுக இயக்கம். இன்றைக்கு அரசியலுக்கு வந்த சுள்ளான்கள் எல்லாம் அடுத்த எம்.ஜி.ஆர்.தான் தான் என்கின்றனர். அது ஒரு காலமும் நடக்காது. இது திராவிட பூமி. தி.க., அடுத்து திமுக, அடுத்து அதிமுக இதுதான் நிலைமை.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி; பாஜகவும், காங்கிரசும் களத்தில் இல்லை. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அதிமுகவால்தான் முடியும். அதிமுக விருட்சமாக வளர தமிழக மக்கள்தான் காரணம். 53 வயது கொண்ட அதிமுக 31 வருடங்கள் ஆட்சி செய்த கட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

திமுகவில் கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அடுத்து இன்பநிதி என ஜனநாயகமே இல்லாமல் வாரிசுகள் பதவிக்கு வரும் மன்னராட்சி நடைமுறை உள்ளது. திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை, ஏய்ப்பவர்களுக்கு தான் மரியாதை. ஆனால் அதிமுகவில் மட்டும் தான் உழைப்புக்கு மரியாதை இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புங்கள்; அவர் நலமாக வாழட்டும்; எடப்பாடி பழனிசாமியை கோட்டைக்கு அனுப்புங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்