பி.ஏ.பி. பிரதான கால்வாயில் திடீர் உடைப்பு

பொள்ளாச்சி அருகே சீலக்காம்பட்டியில் பி.ஏ.பி. பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

Update: 2023-10-03 20:00 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 4 மண்டலங்களாக பிரித்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் 4-ம் மண்டல பாசனத்திற்கு கடந்த 20-ந்தேதி முதல் பி.ஏ.பி. பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.


இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சீலக்காம்பட்டியில் கால்வாயின் 26-வது கிலோ மீட்டர் தூரத்தில் கால்வாயின் இடதுபுறத்தில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டது. இதற்கிடையில் நேற்று நள்ளிரவு திடீரென்று அதே பகுதியில் கால்வாயின் வலதுபுறத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதை நேற்று அதிகாலை 5 மணிக்கு தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் பார்த்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் பேரில் அதிகாரிகள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது கால்வாயின் கரையில் ஓட்டை விழுந்து தண்ணீர் வீணாகுவது தெரியவந்தது. இதை தொடர்ந்து திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. மேலும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் விரைந்து வந்து உடைப்பு ஏற்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.


மேலும் அதிகாரிகளிடம் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அவர் அறிவுறுத்தினார். அப்போது திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாசன சபை தலைவர்கள் உடன் இருந்தனர். இதை தொடர்ந்து உடனடியாக சீரமைப்பு பணிகளும் தொடங்கப்பட்டன. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-


கால்வாயின் 26-வது கிலோ மீட்டர் தூரத்தில் வண்டிப்பாதை செல்லும் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி உள்ளது. மேலும் மழைநீர் செல்வதற்கு கால்வாயின் கீழ் பகுதியில் சுரங்க கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக தண்ணீர் கால்வாயின் இடதுபுறம் வழியாகவும் வெளியேறி வருகிறது. தற்போது தண்ணீரை நிறுத்தி ஓட்டையில் மண்ணை கொட்டி அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அந்த பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணிகளை விரைவில் முடித்து நாளைக்குள் (வியாழக்கிழமை) கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்