தடுப்பு சுவரில் மோதிய வேன் மீது அய்யப்ப பக்தர்கள் வேன் மோதி விபத்து
தடுப்பு சுவரில் மோதிய வேன் மீது அய்யப்ப பக்தர்கள் வேன் மோதிய விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.
தடுப்பு சுவரில் மோதிய வேன் மீது அய்யப்ப பக்தர்கள் வேன் மோதிய விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.
ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனி ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்று வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அந்த கம்பெனியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பணிகளை முடித்துக் கொண்டு ஊழியர்கள் ஆரணியை அடுத்த இரும்பேடு பகுதிக்கு செல்ல வேண்டிய நிறுவன வேனில் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஊழியர் சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அந்த ஊழியர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையில் இருந்து திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
அவர்களது வேன் வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வீ.சி. மோட்டூர் அருகே எம்.பி.டி.சாலையில் சென்றபோது நடுவே அமைக்கப்பட்டு இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது திருத்தணியிலிருந்து சபரிமலை நோக்கி அய்யப்ப பக்தர்கள் வந்த வேன், விபத்துக்குள்ளான வேன் மீது மோதியது,.
இந்த விபத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி வந்த வேன் குப்புறக்கவிழ்ந்த நிலையில் அதில் இருந்த 13 பேரில் 9 பேர் காயம் அடைந்தனர். அதேபோல் அய்யப்ப பக்தர்கள் வந்த வேனில் இருந்த 21 பேரில் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும் 5 பேர் லேசான காயம் அடைந்தனர்.
இவ்வாறு 2 வேனந்களிலும் காயம் அடைந்த 15 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் படுகாயம் அடைந்த அய்யப்ப பக்தர் மட்டும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்த வாலாஜா போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
=========
படம்