மாணவர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க விழிப்புணர்வு:கலெக்டர் உத்தரவு

மாணவர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2022-12-31 17:05 GMT

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். இதில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல், குழந்தை திருமணம் தடுப்பு, குழந்தை தத்து எடுத்தல், குழந்தை தொழிலாளர் மீட்பு போன்றவை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் முரளிதரன் பேசியதாவது:-

மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களிடம் நேர்மறை எண்ணங்களை மேம்படுத்தவும், தேர்வு பயத்தை போக்குவது குறித்தும் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தபால் அட்டைகள் வழங்கி குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

போதைப்பொருட்கள்

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் நடத்த வேண்டும். மாணவர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் விவரங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் குழந்தைகளுக்கான சேவை எண் 1098 என எழுதப்பட்ட புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழக அரசின் உத்தரவின்படி, காப்பகங்களில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான அரசின் நிதியினை பெறுவதற்கான வங்கி கணக்கு தொடங்க வேண்டும். குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். உரிமம் பெறாமல் இயங்கும் குழந்தைகள் இல்லங்கள் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முரளி, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்