திருவள்ளூர் மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நெகிழி மாசுபாட்டிற்கான தீர்வுகள் என்ற மையக்கருத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து காட்சிபடுத்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிறுவப்பட்ட எல்.இ.டி காணொலி திரை கலெக்டரால் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் மக்களிடையே பிளாஸ்டிக் பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காமராஜர் சிலை வரை இந்த பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இதில் கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சப்பையுடன் மரக்கன்றுகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இலவசமாக வழங்கினார்.