பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
கோத்தகிரி அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மத்திய அரசின் 'சங்கல்ப் சப்தா' திட்டத்தின் கீழ் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் லட்சிய ஊராட்சி ஒன்றியமாகவும், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கெங்கரை, ஜக்கனாரை, நெடுகுளா, கொணவக்கரை ஆகிய 4 கிராம ஊராட்சிகளும் லட்சிய கிராம ஊராட்சிகளாகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதையொட்டி ஒன்றிய தலைவர் ராம்குமார், ஊராட்சி தலைவர்கள் முருகன், சுகுணா சிவா, ஜெயபிரியா ஹரிஹரன், சுமதி சுரேஷ் ஆகியோர் கடந்த வாரம் டெல்லியில் நடந்த திட்ட தொடக்க விழாவில் பங்கேற்று பயிற்சி பெற்று திரும்பினர்.
இந்தநிலையில் நேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் துணிப்பை பயன்படுத்துவது குறித்து ஜக்கனாரை ஊராட்சி சார்பில் அரவேனு பஜார் பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை ஊராட்சி தலைவர் ராம்குமார் தொடங்க்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனன், அனிதா, ஊராட்சி தலைவர் சுமதி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் சென்றவர்கள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் பள்ளி குழந்தைகளுக்கான ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதேபோன்று லட்சிய கிராம ஊராட்சிகளாக தேர்வு செய்யப்பட்ட மற்ற ஊராட்சிகளிலும் பேரணி நடைபெற்றது.