அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 10 நாட்களுக்கு நடைபெறும் என கலெக்டர் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 10 நாட்களுக்கு நடைபெறும் என கலெக்டர் தெரிவித்தார்.
விழிப்புணர்வு
ஒருங்கிணைந்த பள்ளிகல்வித்துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் 2023-2024-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கில் மாணவர் கொண்டாட்டம் கொண்டாடுதல் நிகழ்வு 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இக்கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக விழிப்புணர்வு பேரணி தொடக்க விழா சிவகங்கை பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர்அவர் கூறியதாவது:- மாவட்டத்தில் 2023-2024-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கில் மாணவர் கொண்டாட்டம் கொண்டாடுதல் நிகழ்வு 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
பரப்புரை வாகனங்கள்
இந்நிகழ்வில் அரசுப்பள்ளிகளின் சிறப்பு அம்சங்கள் குறித்தும், பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதையும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள சிறப்பு திட்டங்களான எண்ணும் எழுத்தும் திட்டம், காலை உணவு திட்டம், 7.5 சதவீத இட ஒதுக்கீடு, புதுமைப்பெண் திட்டம், வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா, இல்லம் தேடி கல்வித்திட்டம், நான் முதல்வன் திட்டம் குறித்தும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும், தமிழக அரசின் கல்வி சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி விளக்குவதற்காகவும் இரண்டு பரப்புரை வாகனங்கள் 8 நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அனைத்து ஒன்றியங்களுக்கும் சென்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சீதாலெட்சுமி, உதவி திட்ட அலுவலர் பீட்டர்லெமாயு, மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலைக்கல்வி) சண்முகநாதன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் சந்திரகுமார்(சிவகங்கை), சந்திரகுமார் (தேவகோட்டை) உள்பட பலர் கலந்துகொண்டனர்.