235 கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டம்

மருதுபாண்டியர் நினைவு தினம், முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு 235 கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது என போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

Update: 2023-10-17 18:45 GMT

விழிப்புணர்வு கூட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வருகிற 24-ந் தேதி மருதுபாண்டியர்களின் நினைவு தின அரசுவிழாவும், 27-ந் தேதி காளையார்கோவிலில் நினைவு தின விழாவும், 30-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவும் நடக்கிறது. இந்த நிகழ்வுகளின்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் கிராமம், கிராமமாக விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருகிறார்.

இதனடிப்படையில் கிராம அளவிலான விழிப்புணர்வு கூட்டம் மானாமதுரை தாலுகா வெள்ளிகுறிச்சி, மழவராயனேந்தல் கிராமங்களில் நடைபெற்றது. கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் பேசியதாவது:-

சட்ட நடவடிக்கை

மருதுபாண்டியர்களின் நினைவு நாள், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை நிகழ்ச்சிகளுக்கு அஞ்சலி செலுத்த செல்பவர்கள் கண்டிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதியில்லை. சொந்த 4 சக்கர வாகனங்களை பயன்படுத்தி செல்லலாம். அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகளிடம் உரிய தகவல்களை கொடுத்து அரசு போக்குவரத்து கழக பஸ்களை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை கொடுத்து செல்லலாம்.

4 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் உரிய ஆவணங்கள், பயணம் மேற்கொள்பவர்களின் விவரங்களை துணை போலீஸ் சூப்பிரண்டுகளிடம் கொடுத்து உரிய அனுமதி பெறவேண்டும். வாகனங்களின் மேற்கூரையில் பயணம் மேற்கொள்ளக்கூடாது. விதிமுறைகளை கடைபிடிக்காத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கண்காணிப்பு கேமராக்கள்

போக்குவரத்து வழித்தடங்களில் இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. நடை பயணமாக சென்று அஞ்சலி செலுத்த அனுமதியில்லை. பொது இடங்களில் விளம்பரங்கள் செய்யக்கூடாது. அனுமதிக்கப்பட்ட வழிப்பாதைகளில் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் நிகழ்வுகளை பதிவு செய்வதற்கு ஏதுவாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கினை பாதுகாப்பதற்கு போலீசாருக்கு உதவியாக இருக்க வேண்டும். பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலை தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தர வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 235 கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்