சுற்றுலா தொழிலை ஊக்குவிக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விருது - அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு
சுற்றுலா தொழிலை ஊக்குவிக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் கா.ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளா், உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா், பயண பங்குதாரா், விமான பங்குதாரா், தங்குமிடம், உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலாவை ஊக்குவிக்கும் சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம், சுற்றுலாப் பிரிவுகளின் ஏற்பாட்டாளா்;
சாகசம் மற்றும் தங்கும் முகாம்களுக்கான சுற்றுலா ஏற்பாட்டாளா், சமூக ஊடகங்களில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்துபவா், சுற்றுலா வழிகாட்டி, தமிழகத்தின் சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் ஆகியவை உள்பட 17 பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்படுவோருக்கு 45 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
அதன்படி 2022-2023-ஆம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகள் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். இதற்காக அவர்கள் சுற்றுலா இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து வருகிற 15-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அப்படி அனுப்பப்படும் விண்ணப்பங்கள், விருது குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு தோ்வு செய்யப்படும் நபா்களின் விவரம் உரியவா்களுக்கு தெரிவிக்கப்படும். இந்த விருதுகள் சென்னையில் செப்டம்பா் 27-ந்தேதி நடைபெற உள்ள உலக சுற்றுலா தினவிழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.