ஆவின் டிலைட் 200 மி.லி. பாக்கெட் நாளை முதல் அறிமுகம்: ரூ.10-க்கு கிடைக்கும்
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 14.50 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 14.50 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் நாளொன்றுக்கு சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள பால் உபபொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களின் பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜெந்தா நிறம்), சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) மற்றும் நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு நிறம்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையிலும் மற்றும் அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் கடந்த மே 9-ந்தேதி சென்னையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட 500 மி.லி. ஆவின் டிலைட் பால் (ஊதா நிற பால் பாக்கெட்) அறிமுகம் செய்யப்பட்டு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது ஆவின் 500 மி.லி. டிலைட் பால் ரூ.21 விலையில் மாதாந்திர பால் அட்டைகள் வருகிற டிசம்பர் மாதம் முதல் அனைத்து வட்டார அலுவலகங்கள், ஆவின் பாலகங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும்.
மேலும் பொது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரூ.10-க்கு 200 மி.லி. ஆவின் டிலைட் பால் வருகிற 1-ந்தேதி (நாளை) முதல் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.