மீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரி ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரதம்

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழ்நாடு அரசு மீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரி ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-10 06:05 GMT

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்திட வேண்டும், தமிழகத்தில் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே, சென்னை மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்கங்களின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்தில், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில செயல் தலைவர் பாலசுப்ரமணியம், பொது செயலாளர்கள் உமாபதி, ஜெயகோபால், தென்சென்னை மாவட்ட தலைவர் முகமது அனிபா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில செயல் தலைவர் பாலசுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தியது. விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனடியாக உயர்த்திக்கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.50, அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.25 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.

இதை அரசு பரிசீலனையில் எடுப்பதாக கூறியது. ஆனால், ஐகோர்ட்டு உத்தரவிட்டு 18 மாதங்கள் நிறைவடைந்த போதிலும் இதுவரை மீட்டர் கட்டணத்தை உயர்த்த எந்த ஒரு நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. இதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லவே தமிழ்நாடு முழுவதும் இன்று (நேற்று) உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து முத்தரப்பு கமிட்டியை அரசு அமைக்க வேண்டும். கட்டண உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

ஓலா, ஊபர் போன்ற சேவையை அரசே தொடங்க வேண்டும். இதனால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும். கேரளாவில் இந்த நடைமுறை உள்ளது. அதை இங்கேயும் பின்பற்ற வேண்டும். பைக் டாக்சி சேவைகள் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. இதை முறைப்படுத்த வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை தி.மு.க. எதிர்த்து வாக்களித்தது. ஆனால், தற்போது தமிழகத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்துகிறார்கள். புதிய மோட்டார் வாகன சட்டத்தை அரசு அமல்படுத்தக்கூடாது. தி.மு.க. தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் ஆட்டோ டிரைவர்கள் புதிய ஆட்டோ வாங்கினால் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால், இதுவரையில் ஒருவருக்கு கூட இந்த உதவித்தொகை வழங்கவில்லை. இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்