சேலம் பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்கள் மோதல்-போலீஸ் நிலையம் முற்றுகையால் பரபரப்பு

சேலம் பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்கள் இருதரப்பாக மோதிக்கொண்டனர். இதனால் ஒரு தரப்பினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2023-06-27 21:07 GMT

ஆட்டோ டிரைவர்கள் மோதல்

சேலம் பழைய பஸ் நிலைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக ஈரடுக்கு பஸ் நிலையமாக மாற்றி சமீபத்தில் திறக்கப்பட்டது. தற்போது அங்கிருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, மாநகரில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஈரடுக்கு பஸ் நிலையத்தை சுற்றிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றன.

இந்நிலையில் காந்தி சிலை அருகே நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோக்கள் தற்போது அண்ணா சிலை அருகே நிறுத்தப்பட்டு வருவதாகவும், இதற்காக அண்ணா சிலை அருகே நிறுத்தி உள்ள ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் இருதரப்பு ஆட்டோ டிரைவர்கள் மோதிக்கொண்டனர். ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டனர் இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் நிலையம் முற்றுகை

தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர். இதனிடையே காந்தி சிலை ஆட்டோ டிரைவர்கள் நேற்று காலை அண்ணா சிலை அருகே ஆட்டோக்களை நிறுத்தினர். இதனை கண்டித்து அண்ணா சிலை ஆட்டோ டிரைவர்கள் டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்று முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் ஆட்டோவை நிறுத்தி வருவதாகவும், ஆனால் தற்போது எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுதொடர்பாக டவுன் போலீசார் இருதரப்பு ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டோக்களை நிறுத்தி ஓட்டுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் ஆட்டோ டிரைவர்கள் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்