மீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரி ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரி சென்னை எழும்பூரில் ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-26 08:01 GMT

சென்னை,

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தவேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆட்டோ-டாக்சி தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று போராட்டம் நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

பின்னர், சங்கத்தின் மாநில செயல் தலைவர் பாலசுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது. பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு 2 ஆண்டுகள் முடிய உள்ளது. ஆனால், இதுவரையில் மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது. இதேபோல, மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தி ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இது ஆட்டோ டிரைவர்களை கடுமையாக பாதிக்கிறது. ஏற்கனவே, எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசுக்கு மனு கொடுத்தும் இதுவரை அரசு நிறைவேற்றவில்லை. ஆட்டோ தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசு மெத்தனப்போக்குடன் நடந்துகொள்கிறது.

எனவே, ஆன்லைன் அபராதத்திலிருந்து ஆட்டோவுக்கு விலக்கு கொடுக்க வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தக்கூடாது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி மீட்டர் கட்டணத்தை உயர்த்திட வேண்டும். அரசே ஆட்டோ செயலி ஒன்றை தொடங்கவேண்டும். பைக் டாக்சியை தடை செய்யவேண்டும். மேலும், புதிய ஆட்டோக்களுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும். ஆட்டோ தொழிலையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்