கூவம் ஆற்றில் குதித்த பெண்ணை மீட்ட ஆட்டோ டிரைவர்
சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் குதிக்க முயன்ற பெண்ணை காப்பாற்றிய ஆட்டோ டிரைவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ.காலனி பகுதியை சேர்ந்த 21 வயதுடைய பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நேற்று மெரினா கடற்கரைக்கு விநாயகர் சிலையை கரைப்பதற்காக வந்துள்ளனர். அப்போது, நேப்பியர் பாலம் அருகே குடும்பத்துடன் நடந்து சென்றபோது அந்தப்பெண் திடீரென பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் குதித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் கத்தி கூச்சலிட்டனர்.
அப்போது, அப்பகுதி வழியே ஆட்டோவில் வந்த மகேஷ் என்பவர் உடனே கூவம் ஆற்றில் குதித்து அந்தப்பெண்ணை தண்ணீரில் மூழ்க விடாமல் மீட்டார். இதேபோல, அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து கயிறு மூலம் பெண்ணை மீட்டனர். பின்னர், போலீசார் அந்தப்பெண்ணை முதலுதவி சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. இதேபோல, பெண்ணை பாதுகாப்பாக மீட்ட ஆட்டோ டிரைவர் மகேஷை போலீசாரும், பொதுமக்களும் பாராட்டினர்.