தலையில் கல்லைப்போட்டு ஆட்டோ டிரைவர் படுகொலை; வெறிச்செயலில் ஈடுபட்ட தந்தை போலீசில் சரண்

பட்டிவீரன்பட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு ஆட்டோ டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட தந்தை போலீசில் சரண் அடைந்தார்.

Update: 2023-02-24 20:30 GMT

பட்டிவீரன்பட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு ஆட்டோ டிரைவர் படுகொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட தந்தை போலீசில் சரண் அடைந்தார்.

ஆட்டோ டிரைவர்

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 60). இவர் வட்டிக்கு பணம் கொடுத்து, வசூலிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் பழனிசாமி தனது 2-வது மனைவி பாக்கியலட்சுமியுடன் சித்தரேவு கிராமத்தில் வசித்து வந்தார். பழனிசாமிக்கு, பாக்கிலட்சுமி மூலம் கணேசன் (35) என்ற மகன் இருந்தார். ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பழனிசாமிக்கும், பாக்கியலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பழனிசாமி, பாக்கியலட்சுமியை கத்தியால் குத்தினார்.

கல்லைப்போட்டு கொலை

இதுகுறித்த புகாரின்பேரில் பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாக்கியலட்சுமி, தனது மகன் கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் நிலக்கோட்டை அருகே குருவித்துறையில் வசித்து வந்தார்.

இதற்கிடையே சிறையில் இருந்த பழனிசாமியை கடந்த 17-ந்தேதி கணேசன் ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, ஜாமீனில் எடுத்ததற்கு செலவான பணத்தை கேட்பதற்காக பழனிசாமியை பார்க்க கணேசன் சென்றார். ஆனால் அங்கு பழனிசாமி இல்லை.

இதனால் அந்த வீட்டில் கணேசன் படுத்து ஓய்வெடுத்தார். நள்ளிரவில் அங்கு வந்த பழனிசாமி, தனது மகன் என்றுகூட பார்க்காமல் அப்பகுதியில் கிடந்த பெரிய கல்லை எடுத்து கணேசனின் தலையில் போட்டார். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து அவர் பலியானார்.

போலீசில் சரண்

அதன்பிறகு பழனிசாமி நேராக பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீசாரிடம், தனது மகனை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக கூறி சரணடைந்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கணேசனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

அதில், பழனிசாமியிடம் கணேசன் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த பழனிசாமி, கணேசனை கொலை செய்தது தெரியவந்தது.

மகனை தந்தையே தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்