கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி

கரூர் அருகே தாத்தாவின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்டோ டிரைவர் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2023-02-15 19:16 GMT

ஆற்றில் மூழ்கி பலி

கரூர் செல்லாண்டிபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 80 ). இவர் வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து அந்த முதியவரின் 5-வது நாள் இறுதி சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நிகழ்ச்சியில் பங்கேற்க அவரது பேரன் ஆட்டோ டிரைவரான கோவையை சேர்ந்த ராஜேஷ் கிரீம் (32) செல்லாண்டிபாளையத்திற்கு வந்திருந்தார். பின்னர் தாத்தாவிற்கு இறுதி சடங்கு செய்வதற்காக ராஜேஷ் கிரீம் வாங்கல் காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது, ராஜேஷ் கிரீம் மணல் குழியில் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டனர். இதையடுத்து அங்கிருந்த வாலிபர்கள் ஆற்றில் இறங்கி ராஜேஷ் கிரீமை தேடினர். பின்னர் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ராஜேஷ் கிரீம் பிணமாக மீட்கப்பட்டார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ராஜேஷ் கிரீமின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்றில் மூழ்கி இறந்த ராஜேஷ் கிரீமுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளன. தாத்தா இறந்த இறுதிசடங்கு நிகழ்ச்சிக்கு வந்த பேரன் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்