போரூரில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதம் செய்த ஆட்டோ டிரைவர் - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

போரூரில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதம் செய்த ஆட்டோ டிரைவர், சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Update: 2022-12-01 10:04 GMT

சென்னை மவுண்ட்-பூந்தமல்லி சாலையில், போரூர் ஏரியில் இருந்து தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையை இணைக்கும் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால் அங்கு போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அந்த வழியாக மதுரவாயல் நோக்கி பெண் பயணியை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று வாகன நெரிசல் ஏற்படும் விதமாக போக்குவரத்து விதிமுறைகளை மீறி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அங்கு பணியில் இருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் கவனித்துவிட்டு, அந்த ஆட்டோவை மடக்கி, டிரைவரிடம் தட்டிக்கேட்டார்.

இதனால் ஆட்டோ டிரைவருக்கும், சப்-இன்ஸ்பெக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே ஆட்டோ டிரைவரை, சப்-இன்ஸ்பெக்டர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார். பதிலுக்கு ஆட்டோ டிரைவரும் தனது செல்போனில் சப்-இன்ஸ்பெக்டரை புகைப்படம் எடுத்தார். அதற்கு சப்-இன்ஸ்பெக்டர் விரைப்பாக நின்று போஸ் கொடுத்தார்.

மேலும் விதிமுறைகளை மீறி வந்தது தொடர்பாக அபராதம் விதிப்பேன் என சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் கூறினார். இதனால் இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர், வாகனங்கள் சென்று கொண்டிருந்த சாலையில் திடீரென நடுரோட்டில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகளும், போக்குவரத்து போலீசாரும் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரிடம் சமரசம் பேசினார்கள். பின்னர் ஆட்டோ டிரைவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த காட்சிகளை அந்த வழியாக சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்