ஆடி அமாவாசை திருவிழா: சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செக்க இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Update: 2022-07-26 01:52 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தென்காசி, தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த திருவிழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் தேவையான வசதிகளை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், திருவிழாவையொட்டி காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் காரையாறுக்கு செல்ல அனுமதியில்லை. தனியார் வாகனங்களை அம்பை அகஸ்தியர்பட்டியில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து அரசு பஸ்களில் செல்லலாம். பிளாஸ்டிக் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் கொரோனா காலத்திற்கு பின்னர், அதாவது 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போலீசார், வனத்துறையினர், பள்ளி- கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சுற்றுலா தலங்களுக்கு வருகிற 30-ந்தேதி (சனிக்கிழமை) வரை செல்ல தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலை குதிரைவெட்டியில் உள்ள ஓய்வு இல்லம் போன்ற பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த இடங்கள் எல்லாம் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்