2 நகை கடைகளில் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி

நாகர்கோவிலில் 2 நகை கடைகளில் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

Update: 2022-09-24 18:45 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் 2 நகை கடைகளில் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நகை கடை

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் முத்ரா. இவர் அலெக்சாண்டிரா பிரஸ் ரோட்டில் நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு எதிரே ஷேக் என்பவரின் நகை கடை உள்ளது.

நேற்று முன்தினம் இரவு 2 பேரும் வழக்கம் போல தங்களது நகை கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை கடைக்கு வந்து பார்த்த போது 2 நகை கடைகளின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கடைக்குள் சென்று பார்த்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக நகையோ, பணமோ கொள்ளை போகவில்லை. இரவில் யாரோ மர்ம நபர்கள் கடையின் ஷட்டரை உடைத்து நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்திருப்பது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கடையில் இருந்து சிறிது நேரம் மோப்பம் பிடித்து ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த அலெக்சாண்டிரா பிரஸ் ரோட்டில் உள்ள அடுத்தடுத்த நகை கடைகளில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்