ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் ரேஷன் கடை ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் ரேஷன் கடை ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-29 21:33 GMT

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் ரேஷன் கடை ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரேஷன் கடை ஊழியர்

ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 35). இவர் முனிசிபல் காலனியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய உறவுக்கார பெண் ஒருவர் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். நில பிரச்சினை தொடர்பாக ஜெயக்குமாருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். இதையடுத்து ஜெயக்குமாரை தொடர்பு கொண்ட போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வருமாறு தெரிவித்து உள்ளனர். ஆனால் அவர் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு செல்லவில்லை. இதனால் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இந்தநிலையில் மனவேதனை அடைந்த அவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுப்பதற்காக நேற்று காலை வந்தார்.

தீக்குளிக்க முயற்சி

அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை திடீரென எடுத்து உடலில் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் விரைந்து சென்று அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து அவர் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

தீக்குளிக்க முயன்ற ஜெயக்குமார் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து வருவதாகவும், அவர் பிறந்தநாள் தினத்திலேயே மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் ஜெயக்குமார் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்