காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி
சிதம்பரத்தில் காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற 2 பேர் கைது
சிதம்பரம்,
சிதம்பரம் 16 கால் மண்டபத்தில் பிரசித்தி பெற்ற ஓம் சக்தி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் அர்ச்சகராக உள்ளார். நேற்று முன்தினம் கோவிலில் பூஜை முடிந்ததும், கார்த்திகேயன் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை அவர் வழக்கம்போல் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு திடுக்கிட்ட அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது உண்டியலை யாரோ உடைக்க முயன்றதற்கான அடையாளங்கள் காணப்பட்டது. இதுபற்றி அவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்த போது கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், ஸ்ரீமுஷ்ணம் பாளையங்கோட்டை கோவில் தெருவை சேர்ந்த வாண்டு என்கிற தினகரன் (வயது 28), குள்ளஞ்சாவடி அருகே கருமாச்சிப்பாளையத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(29) என்பதும், வடலூர் கோட்டங்கரையை சேர்ந்த குணா என்கிற குணசேகரனுடன் சேர்ந்து காளியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தினகரன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான குணாவை தேடி வருகின்றனர்.