தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அட்டாக் பாண்டிக்கு பரோல்
தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அட்டாக் பாண்டிக்கு பரோல் அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகியாக இருந்த பொட்டுசுரேஷ் கடந்த 2013-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிலும், பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக அட்டாக்பாண்டி சேர்க்கப்பட்டு, கைதானார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் அவரது அண்ணனும், மதுரை கீரைத்துறையை சேர்ந்தவருமான இருளாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எனது தம்பி அட்டாக் பாண்டி, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் எங்களின் தாயார் ராமுத்தாய், உடல்நலக்குறைவினால் இறந்துவிட்டார். அவரது இறுதிச்சடங்கில் அட்டாக் பாண்டி பங்கேற்க வசதியாக 28-ந்தேதி (அதாவது நேற்று) முதல் 6 நாட்கள் அவருக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், அட்டாக்பாண்டியின் தாயார் இறந்துவிட்டார். எனவே தனது தாயாருக்கு இறுதி மரியாதை செய்ய வேண்டியது அவரது உரிமை. இதனால் அட்டாக்பாண்டிக்கு அவசர பரோல் வழங்கப்படுகிறது. அட்டாக் பாண்டியை சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் இன்று (அதாவது நேற்று) தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சிறை அதிகாரிகள் அனுமதிக்கலாம். நாளை (இன்று) மாலை 5 மணிக்கு அவர் மீண்டும் சிறை அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அட்டாக்பாண்டி நேற்று மாலையில் போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் இருந்து வெளியில் வந்தார்.