மேல்மலையனூரில் பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கி பணப்பை பறிப்பு கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

மேல்மலையனூரில் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கி பணப்பையை பறித்துச் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-06 14:44 GMT

திண்டிவனம், 

டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா விலாப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணி மகன் ராஜா (வயது 31). தனியார் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மேல்மலையனூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் பஸ்சை நிறுத்திவிட்டு, தன்னுடன் பணிபுரியும் கண்டக்டருடன் பஸ்சில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் திடீரென டிரைவரையும், கண்டக்டரையும் தாக்கி பணப்பையை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த 2 பேரும் தப்பி ஓடிய வாலிபர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த வாலிபர்கள் இரும்பு கம்பியால் டிரைவரையும், கண்டக்டரையும் தாக்கிவிட்டு, அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.

2 பேர் கைது

இது பற்றி தகவல் அறிந்ததும் வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெட்ரோல் பங்க்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். பின்னர் தப்பி ஓடிய வாலிபர்களை தேடினர். அப்போது அதே பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள வயல்வெளி பகுதியில் பதுங்கி இருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், மேல்மலையனூர் எம்.சி.ராஜா நகரை சேர்ந்த ஏழுமலை மகன் கார்த்திக் (19), செந்தில்குமார் மகன் சுபாஷ் (19) ஆகியோர் என்பதும் பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கி பணப்பையை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பணப்பையில் இருந்த ரூ.8 ஆயிரத்து 70-ஐ மீட்டனர். கைதான கார்த்திக் திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சுபாஷ் செஞ்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு டிப்ளமோ படித்து பாதியில் நின்றுவிட்டதும் தெரியவந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்