மயிலம் அருகே பணம் எடுக்க வந்த பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் ரூ.1 லட்சம் அபேஸ்; மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
மயிலம் அருகே பணம் எடுக்க ஏ.டி.எம். மையத்துக்கு வந்த பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ரூ.1 லட்சத்தை அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
மயிலம்,
ஏ.டி.எம். மையத்துக்கு சென்ற பெண்
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள தொள்ளமூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் சக்திவேல் (வயது 32), விவசாயி. இவர் நேற்று முன்தினம் அதே ஊரை சேர்ந்த ராஜலட்சுமி (27) என்பவரிடம் தனதுஏ.டி.எம். கார்டை கொடுத்ததுடன், அதற்கான ரகசிய எண்ணையும் கூறி ஏ.டி.எம். மையத்தில் ரூ.10 ஆயிரம் எடுத்து வந்து தரும்படி கூறியுள்ளார். கார்டை பெற்ற ராஜலட்சுமி மயிலம் அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்துக்கு சென்று, பணம் எடுக்க முயன்றார். ஆனால் பணம் வரவில்லை. இதைபார்த்த அருகில் நின்ற நபர் ஒருவர் ராஜலட்சுமியிடம் தான் பணம் எடுத்து தருவதாக கூறினார். இதை நம்பிய ராஜலட்சுமி ஏ.டி.எம். கார்டை கொடுத்து, ரகசிய எண்ணையும் அந்த நபரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏ.டி.எம். கார்டை பெற்ற அந்த நபர், எந்திரத்தில் கார்டை பயன்படுத்தி பணம் வரவில்லை என கூறி, ஏ.டி.எம். கார்டை திரும்ப கொடுத்து விட்டு சென்றுவிட்டார். கார்டை பெற்ற ராஜலட்சுமி அங்கிருந்து வீடு திரும்பினார்.
போலி கார்டை கொடுத்து பணம் அபேஸ்
அதன்பிறகு சிலமணி நேரத்தில் சக்திவேலின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சக்திவேல் ராஜலட்சுமியை தொடர்பு கொண்டு ரூ.50 ஆயிரம் எடுத்ததாக குறுந்தகவல் வந்துள்ளதாக கூறியுள்ளார். அதற்கு ராஜலட்சுமி தான் பணம் எடுக்கவில்லை என கூறினார். இதைகேட்டு பதறிய சக்திவேல் ராஜலட்சுமியை சந்தித்து தனது ஏ.டி.எம். கார்டை வாங்கி பார்த்தபோது, அது போலியான கார்டு என்பது தெரியவந்தது. மேலும் ஏ.டி.எம். மையத்தில் இருந்த மர்மநபர் ஏ.டி.எம். கார்டை ராஜலட்சுமியிடம் மாற்றி கொடுத்துடன், அதனை பயன்படுத்தி வானூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.50 ஆயிரம் எடுத்ததும், புதுச்சேரியில் உள்ள ஒரு நகை கடையில் ரூ.50 ஆயிரத்துக்கு நகை வாங்கியதும் தெரிந்தது. இதையடுத்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து பெண்ணிடம் போலி ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் ரூ.1 லட்சத்தை அபேஸ் செய்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.