திருச்செந்தூர் கடற்கரையில்பெற்றோருடன் தூங்கிய 2½ வயதுபெண் குழந்தை கடத்தலா?

திருச்செந்தூர் கடற்கரையில் பெற்றோருடன் தூங்கிய 2½ வயது பெண் குழந்தை கடத்தப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-22 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கடற்கரையில் பெற்றோருடன் தூங்கிய 2½ வயது குழந்தை கடத்தப்பட்டதா? என்பது குறித்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2½ வயது பெண் குழந்தை

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி சாஸ்திரிநகரை சேர்ந்தவர் பாபநாசம் (வயது 48). இவரது மனைவி பார்வதி (39). இவர்களுக்கு சந்தோஷ் (13), அந்தோணி (12) ஆகிய மகன்களும், சஞ்சி (9), முத்தாரம்மாள் (8), முத்துப்பேச்சி (2½) ஆகிய மகள்களும் உள்ளனர்.

பாபநாசம், சாலை-தெருக்களில் கிடக்கும் பழைய பேப்பர், குப்பைகளை சேகரித்து அதை கடைகளில் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.

திருச்செந்தூர் வந்தனர்

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாபநாசம் தனது குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு சென்றார். அங்கேயே தங்கியிருந்து கடற்கரை மற்றும் சாலைகளில் கிடக்கும் பழைய பேப்பர்களை எடுத்து கடைகளில் விற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அவர் வழக்கம் போல் கோவில் கடற்கரையில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டு இருந்தார்.

அதிகாலை 4 மணிக்கு பாபநாசம் விழித்து பார்த்தபோது, குழந்தை முத்துப்பேச்சி தனது தாய் அருகில் தூங்கிக் கொண்டு இருந்தது. பின்னர் மீண்டும் 5.30 மணிக்கு எழுந்து பார்த்தபோது, முத்துப்பேச்சியை காணவில்லை.

போலீசார் விரைந்தனர்

இதனால் அதிர்ச்சி அடைந்த பாபநாசம் கடற்கரை பகுதி முழுவதும் தேடினார். ஆனால் குழந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவர் திருச்செந்தூர் கோவில் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மோகன்காந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

கடத்தலா?

பெற்றோருடன் தூங்கிக் கொண்டு இருந்த குழந்தை மாயமானதால், யாரேனும் குழந்தையை கடத்தி சென்றார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடிவருகிறார்கள். இதனால் திருச்செந்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.

----------

Tags:    

மேலும் செய்திகள்