சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பொது மேலாளர் மல்லையா ஆய்வு தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரத்தை தொடங்கி வைத்தார்
சேலம் ஜங்ஷனில் ரெயில்வே பொது மேலாளர் மல்லையா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது முடிக்கப்பட்ட திட்டப்பணிகளான தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம், ரெயில் பெட்டி நிற்கும் இடத்தை காட்டும் எலக்ட்ரானிக் போர்டு மற்றும் ஜங்ஷன் செயலிலை தொடங்கி வைத்தார்.
சூரமங்கலம்,
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம்
தெற்கு ரெயில்வே மேலாளர் பி.ஜி.மல்லையா நேற்று மதியம் சென்னையில் இருந்து தனி ரெயில் மூலம் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்தார். சேலம் வந்த அவருக்கு கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ், கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதையடுத்து ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா, சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள ரெயில் பெட்டி நிற்கும் இடத்தை காட்டும் எலக்ட்ரானிக் போர்டை (எலக்ட்ரானிக் கோச் இண்டிகேஷன் போர்டு) திறந்து வைத்தார்.
டிக்கெட் எந்திரம், செயலி
மேலும் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரத்தை திறந்து வைத்தார். அதன்பிறகு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் குறித்த தகவலை ரெயில் பயணிகள் அறிந்து கொள்வதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட 'சேலம் ஜங்ஷன்' என்ற செயலியை தொடங்கி வைத்தார்.
ரெயில் நிலையத்தில் உள்ள உடல் எடை அளவை அறிந்து கொள்ள வைக்கப்பட்டுள்ள பி.எம்.ஐ. எந்திரத்தில் ஏறி நின்று பார்த்து சரியாக இயங்குகிறதா? என ஆய்வு மேற்கொண்டார்.
அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம்
இதேபோல் ரெயில் நிலையத்தில் உள்ள பிரத்யேக கைத்தறி கடையை பார்வையிட்டு அங்கு விற்பனைக்காக வைத்திருந்த துணி வகைகளை பார்வையிட்டார். அதன்பிறகு ரெயில் நிலையத்தில் உள்ள சிக்னல் பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தார். பின்னர் அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகத்திற்கு சென்றார். அங்கு ரெயில்வே கோட்ட மேலாளர் பி.ஜி.மல்லையா, ரெயில்வே உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில் ரெயில்வே துறை சார்பில் முடிக்கப்பட்ட பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆலோசனை செய்தார்.
மேலும் சேலம் ரெயில்வே கோட்டத்தில் செய்யப்பட வேண்டிய வளர்ச்சி பணிகளை கேட்டு அறிந்தார். இதையடுத்து ஜங்ஷனில் இருந்து ஈரோட்டுக்கு தனி ரெயிலில் சென்றார்.
அப்போது சேலம் ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன், ஜங்ஷன் ரெயில் நிலைய அதிகாரி செல்வராஜ், உதவி நிலைய அதிகாரி அய்யாவு உள்பட ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
டேனிஷ்பேட்டையில் ஆய்வு
முன்னதாக சேலம் வரும் வழியில் டேனிஷ்பேட்டை ரெயில் நிலையத்திலும் பொது மேலாளர் பி.ஜி.மல்லையா ஆய்வு மேற்கொண்டார். இந்த ரெயில் நிலையம் அருகே புனரமைக்கப்பட்டு உள்ள சுரங்க பாலத்தை பார்வையிட்ட அவர், அந்த பாலத்தின் உறுதித்தன்மை குறித்தும், ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் நடைமேடை உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, சேலம்-அரக்கோணம் பயணிகள் ரெயிலை மீண்டும் டேனிஷ்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கோரி டேனிஷ் பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் நர்மதாதேவி முருகன் தலைமையில் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே சுரங்க பாலங்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம பொதுமக்கள் ரெயில்வே அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.