ஈரோட்டில்பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டம்;கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை

ஈரோட்டில் புத்தாண்டு பிறந்ததை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Update: 2023-01-01 00:37 GMT

ஈரோட்டில் புத்தாண்டு பிறந்ததை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

புத்தாண்டு பிறப்பு

2022-ம் ஆண்டு நேற்று நிறைவு பெற்று, புத்தாண்டாக 2023 இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிறந்து உள்ளது. புத்தாண்டுபிறப்பு என்பது அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாகும். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட உலகம் மீண்டும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடும் புத்தாண்டாக 2023 உள்ளது.

இதை முன்னிட்டு நேற்று மாலையில் இருந்தே பொதுமக்கள் புத்தாண்டினை உற்சாகமாக கொண்டாட தொடங்கினார்கள். புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியுடன் தொடங்கும் வகையில் நேற்று ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளில் மக்கள் அதிகமாக பொருட்கள் வாங்கினார்கள். கடைகள், வியாபார நிறுவனங்களில் அலங்கார மின்விளக்குகள் போடப்பட்டு இருந்தது.

கொண்டாட்டம்

ஈரோட்டில் புத்தாண்டு என்றாலே, நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் வினாடியை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்கும் இடமாக பன்னீர் செல்வம் பூங்கா உள்ளது. இங்குள்ள பிரப் நினைவு சி.எஸ்.ஐ. ஆலயம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, நள்ளிரவு சரியாக 12 மணிக்கு புத்தாண்டு பிறப்பதை அடையாளமாக காட்டும் வகையில் மின்விளக்குகள் போடப்படும்.

இதை பார்த்துக்கொண்டே புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடும் வகையில் நேற்று இரவு 11 மணியில் இருந்தே இளைஞர்கள், இளம்பெண்கள் பன்னீர்செல்வம் பூங்காவில் கூடத்தொடங்கினார்கள். 12 மணிக்கு ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்து 'ஹேப்பி நியூ இயர்' என்று கோஷம் எழுப்பி உற்சாகமாக கொண்டாடினார்கள். குழுக்களாக சேர்ந்து கேக் வெட்டியும், ஒருவருக்கு ஒருவர் கேக் ஊட்டியும் மகிழ்ந்தனர்.

புத்தாண்டினையொட்டி ஈரோடு மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் இருந்தனர்.

நள்ளிரவு வழிபாடு

புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று நள்ளிரவு ஈரோட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு நள்ளிரவு திருப்பலி பிரார்த்தனை நடந்தது. ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும் பங்குத்தந்தையுமான ஜான் சேவியர் தலைமையில் நன்றி ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர், பிரார்த்தனை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு மின் விளக்கு அலங்காரத்தில் புத்தாண்டு பிறப்பு அடையாளப்படுத்தப்பட்டது. அப்போது அங்கு பிரார்த்தனையில் கலந்து கொண்ட மக்கள் புத்தாண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது. உதவி பங்குத்தந்தை நல்ல ஜேக்கப்தாஸ் கலந்து கொண்டார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆலய வளாகத்தில் சிறுவர்-சிறுமிகளுக்கான புத்தாண்டு போட்டிகள் நடக்கின்றன. மாலை 5 மணிக்கு நற்கருணை ஆராதனையும் தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழா நடக்கிறது. இதில் பட்லூர் ஆலய பங்குத்தந்தை விக்டர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்குகிறார்.

ஈரோடு ரெயில்வே காலனி திருஇருதய ஆண்டவர் ஆலயம் உள்பட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று நள்ளிரவு புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பிரப் நினைவு சி.எஸ்.ஐ. ஆலயத்தில் அதிகாலையில் நன்றி ஆராதனை மற்றும் சிறப்பு பிராத்தனை நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்