ஈரோட்டில் பல்வேறு அமைப்புகளின் சாா்பில் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் பல்வேறு அமைப்புகளின் சாா்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் ஈரோடு மாவட்ட கிளை சார்பில் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பெ.சு.வீரா கார்த்திக் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பொன்.அருள் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் மாநில தலைவர்கள் ரா.ஆனந்தகணேஷ், அ.ஹசீனாபானு, பொருளாளர் கே.தங்கவேலு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரா.மணி ஆகியோர் பேசினார்கள். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் கோஷங்களாக எழுப்பப்பட்டன. முன்னாள் பொறுப்பாளர் கே.சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் ச.நளினி வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஆர்.சிவராமன் நன்றி கூறினார்.
இதேபோல் ஈரோடு மாவட்ட பீடி, சுருட்டு தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் கைபாணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், பாரம்பரிய தொழிலான பீடித்தொழிலை பாதுகாக்கவும், பீடி, சுருட்டு தொழிலாளர்களின் ஊதியம், மருத்துவம், சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், ஷாஜாதி, கமால்தீன், ஜாகீர் உட்பட பலர் பங்கேற்றனர். பின்னர், தங்கள் கோரிக்கை தொடர்பான மனுவை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடம் வழங்கினார்கள்.
தமிழ்நாடு அனைத்து ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி ஈரோடு மாவட்ட அமைப்பு சார்பில் சூரம்பட்டி நால் ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மக்கள் உரிமை பேரவை தலைவர் கண குறிஞ்சி தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக்கழக அமைப்பு செயலாளர் ரத்தினசாமி, நீரோடை அமைப்பு தலைவர் நிலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த வக்கீல் ப.பா.மோகன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள மாவட்ட கலெக்டர், வருவாய் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ.கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழ்புலிகள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.