ஈரோடு சோலாரில் பஸ் நிலையம் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு
ஈரோடு சோலாரில் பஸ் நிலையம் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.
ஈரோடு சோலாரில் பஸ் நிலையம் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
ஈரோடு மாநகராட்சி மையப்பகுதியில் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வந்தது. இதனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஈரோடு சூளை மற்றும் சோலாரில் பஸ் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட சோலாரில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த தற்காலிக பஸ் நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 156 பஸ்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
90 சதவீத பணிகள் நிறைவு
மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் இந்த பஸ் நிலையத்தில் இருந்துதான் இயக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த புதிய பஸ் நிலையத்தில் கடைகள், இருசக்கர வாகன நிறுத்துமிடம், நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம், போக்குவரத்து துறை சார்ந்த அலுவலர்கள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுக்கு அறைகள் கட்டப்பட்டுள்ளன.
கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. பஸ் நிலையத்தின் பணிகள் 90 சதவீதம் முடிந்து உள்ளது. தற்போது பயணிகளுக்கு தேவையான குடிநீர், நடைபாதை மற்றும் இருக்கைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் முடிந்து விரைவில் பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.