சென்னிமலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

திரளான பக்தர்கள் பங்கேற்பு

Update: 2022-11-03 19:30 GMT

சென்னிமலை மாரியம்மன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

மாரியம்மன் கோவில்

சென்னிமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் விழா கடந்த மாதம் 19-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் 26-ந் தேதி இரவு கோவிலில் கம்பம் நடப்பட்டது. அன்று முதல் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் தினமும் காலையில் பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சென்னிமலை பேரூராட்சிக்கு உள்பட்ட காட்டூர், அம்மாபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு வந்தனர்.

பொங்கல் விழா

முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதைத்தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். மேலும் திரளான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற கோவில் வளாகத்தில் உள்ள கருப்பணசாமிக்கு ஆடு, கோழிகளும் பலியிட்டனர்.

இதையொட்டி சென்னிமலை அடிவாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இரவு கம்பம் பிடுங்கப்பட்டு கோவில் கிணற்றில் விடப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொங்கல் விழா நடைபெறவில்லை. இதனால் இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் பொங்கல் வைத்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஈரோடு இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் எம்.அன்னக்கொடி, சென்னிமலை கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்