கோவையில் குடும்பத்துடன் விஷம் குடித்த ஜோதிடர் - தாய் பலி
கோவையில் ஜோதிடர் ஒருவர் குடும்பத்துடன் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
கோவை,
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 41). ஜோதிடர். இவர் இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு துணை தலைவராக உள்ளார். இந்த நிலையில் பிரசன்னா சென்னை வண்ணாரபேட்டையை சேர்ந்த கருப்பையா (வயது 45) என்பவரிடம் இடப்பிரச்சினை தீர்த்து வைப்பதாக கூறி ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் கருப்பையா மனைவியின் 15 பவுன் தாலி செயின் பெற்று மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.
2 ஆண்டுகள் கடந்த பின்னரும் இடப்பிரச்சினை தீராததால் கருப்பைய கோவை செல்வபுரம் போலீசில் இந்த மோசடி குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பிரசன்னா, அவரது மனைவி அஸ்வினி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஜோதிடர் பிரசன்னா குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று மாலை பிரசன்னா, அவரது மனைவி அஸ்வினி (31), தாய் கிருஷ்ணகுமாரி (62) மற்றும் பிரசன்னாவின் மகள்கள் ஆகியோர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
இதில் பிரசன்னாவின் மூத்த மகள் விஷம் குடிக்காமல் அங்கிருந்து தப்பி ஓடி அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த பிரசன்னா உள்ளிட்டோரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு கிருஷ்ணகுமாரியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து பிரசன்னா, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஷம் குடிப்பதற்கு முன்பாக ஜோதிடர் பிரசன்னா, அவரது மனைவி அஸ்வினி, தாய் கிருஷ்ணகுமாரி பேசிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர். அந்த வீடியோவில் அவர்கள் பேசி உள்ளதாவது:-
தங்களது இந்த முடிவுக்கு சென்னையை சேர்ந்த சங்கரன், கருப்பையா ஆகியோர்தான் காரணம். எங்கள் மீது பொய்புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்தோம். தனக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என்று பேசி உள்ளனர்.
இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்து மக்கள் கட்சி பிரமுகர் குடும்பத்துடன் விஷம் குடித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.