வாழைத்தார் வாங்க வியாபாரிகள் வராததால் விவசாயிகள் வேதனை
கடந்த ஆண்டை விட தற்போது வாழைத்தார் விலை பாதியாக குறைந்ததால், வியாபாரிகள் வாங்க வராததால் விவசாயிகளே வெட்டி விற்பனைக்கு எடுத்துச்செல்லும் நிலை உள்ளது. இதனால் செலவு செய்த தொகை கூட கிட்டுமா? என விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர்.
கடந்த ஆண்டை விட தற்போது வாழைத்தார் விலை பாதியாக குறைந்ததால், வியாபாரிகள் வாங்க வராததால் விவசாயிகளே வெட்டி விற்பனைக்கு எடுத்துச்செல்லும் நிலை உள்ளது. இதனால் செலவு செய்த தொகை கூட கிட்டுமா? என விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர்.
வாழை சாகுபடி
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் தூத்துக்குடி, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பூவன்ரக வாழை பயிரிடப்பட்டு வருகின்றன. இதில் காவிரி கரையோர பகுதியான திருவையாறு, ஆச்சனூர், வடுகக்குடி, சாத்தனூர், திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் வரை வாழை பயிரிடப்பட்டு வருகின்றன.
குறிப்பாக இந்த பகுதியில் விளையும் வாழைத்தார் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அறுவடைசெய்யப்படும். அதன்படி தற்போது இந்த பகுதிகளில் வாழைத்தார் அறுவடை நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த காலக்கட்டங்களில் தான் அதாவது வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் முகூர்த்த நாட்கள் மற்றும் கோவில் விழாக்கள் நடைபெறுவதால் வாழைப்பழங்கள் விற்பனையும் அமோகமாக இருக்கும்.
வியாபாரிகள் வரவில்லை
இதனால் விவசாயிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். கடந்த ஆண்டு முதல் ரக வாழைத்தார் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதிலும் குறிப்பாக வாழை அறுவடை தொடங்குவதற்கு முன்பாகவே வியாபாரிகள், சம்பந்தப்பட்ட வயல்களுக்கு சென்று வாழையை பார்வையிட்டு வாழைத்தாருக்கு உரிய விலையை கொடுத்து அறுவடை செய்து எடுத்துச்செல்வார்கள். இதனால் விவசாயிகளுக்கும் அதிக லாபம் கிடைத்து வந்தது.
ஆனால் தற்போது அறுவடை சீசன் தொடங்கிய நிலையிலும் வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் விவசாயிகளே வாழைத்தாரை அறுவடை செய்து விற்பனைக்கு எடுத்துச்செல்லும் நிலை உள்ளது. அவ்வாறு எடுத்துச்சென்றாலும் உரிய விலை கிடைப்பது இல்லை. கடந்த ஆண்டு முதல்ரக வாழைத்தார் ரூ.600-க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. 2-ம் ரக வாழைத்தார் ரூ.100 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
வாழைத்தார் விலை வீழ்ச்சி
மேலும் கடந்த ஆண்டு இதே நாட்களில் 1 கிலோ வாழைப்பழம் ரூ.25-க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.15-க்கு தான் விற்பனையாகிறது. வாழைத்தார் விலை வீழ்ச்சி காரணமாகவும், வியாபாரிகள் யாரும் வாங்க வராததாலும் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வாழை சாகுபடி செய்வதற்கு நிலத்தை உழுது தயார் செய்து, வாழைக்கன்றுகள் நடவு செய்வது, அதற்கு மண் அணைப்பது என ஏக்கருக்கு ரூ.1½ லட்சம் வரை செலவு செய்துள்ளோம். 1 ஏக்கரில் ஆயிரம் வாழைகள் சாகுபடி செய்யப்படும். ஆனால் தற்போது அறுவடை செய்யப்படும் வாழைத்தார் மூலம் ஏக்கருக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் கிடைக்கிறது. அவ்வாறு கிடைத்தாலும் வாழைத்தார் அறுவடை செய்ய கூலி ஆட்கள், அதனை விற்பனைக்கு எடுத்துச்செல்வதற்கு சரக்கு ஆட்டோ வாடகை, விற்பனை செய்யப்படும் இடங்களில் கமிஷன் என பெரும் தொகை செலவு ஆவதால் விவசாயிகளுக்கு உரிய தொகை கிடைப்பது இல்லை. இதனால் செலவு செய்த தொகை கூட கைக்கு கிடைக்குமா? என விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். எனவே பருத்தியை அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மறைமுக ஏலம் மூலம் விற்க நடவடிக்கை எடுத்தது போல் வாழைத்தாரையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். என்றனர்.