சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் கிராம மக்கள் மறியல்

மயிலாடுதுறையில் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-06-30 18:45 GMT


மயிலாடுதுறையில் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிடப்பில் போடப்பட்ட பணி

மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் ஊராட்சி பேச்சாவடி என்ற இடத்தில் அருணாநகர் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது.இந்த தனியார் மெட்ரிக் பள்ளியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் மாணவர்களை அழைத்துச் சென்று வருகின்றன. மேலும் பெற்றோர்களும் தங்கள் வாகனங்களில் பிள்ளைகளை அழைத்துச் சென்று வருவதால் காலை, மாலை நேரங்களில் எப்போதும் போக்குவரத்து அதிக அளவில் காணப்படும்.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிதாக சாலை அமைப்பதாக கூறி சாலை சீரமைப்பு பணி தொடங்கப்பட்டது. அப்போது சாலை முதற்கட்டமாக சீரமைக்கப்பட்டு செம்மண் சாலையாக மாற்றப்பட்டது. அதன்பிறகு எந்த வித பணியும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டதால் தினந்தோறும் சாலையில் செல்லும் வாகனங்களால் புழுதி பறந்து அந்த பகுதி பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் அவதிப்பட்டு வந்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று காலை அப்பள்ளிக்கு செல்லும் சாலையில் வசிக்கும் பொதுமக்கள் சாலையில் குறுக்கே கயிற்றைக் கட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 20-க்கும் மேற்பட்ட பள்ளி வேன்கள் மற்றும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை எடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சாலையில் பள்ளி வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக பள்ளிக்கு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்