கோவில் நிலத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு 'சீல்' வைக்க அதிகாரிகள் முயன்றதால் பரபரப்பு - குடியிருப்புவாசிகள் வாக்குவாதம்

கும்மிடிப்பூண்டி அருகே கோவில் இடத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-28 08:23 GMT

திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான பட்டா நிலம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டு காலனியில் உள்ளது. இந்த இடத்தில் சுமார் 90-க்கும் மேற்பட்ட வீடுகள் பல வருடங்களாக உள்ளது. இதில் முதல் கட்டமாக 10 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காலி செய்திட நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், காலகெடு முடிவடைந்ததையொட்டி நேற்று அப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட 10 வீடுகளுக்கு முதல் கட்டமாக சீல் வைத்திட மாவட்ட ஆலய நிலங்கள் மீட்பு சிறப்பு தாசில்தார் பிரீத்தி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ரா தேவி ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறைனர் அங்கு சென்றனர்.

மேலும் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் குடியிருப்புவாசிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தாசில்தார் பிரீத்தி, வீடுகளுக்கு சீல் வைத்திட உத்திரவிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்தார். அப்போது அவரை பெண்கள் ஒன்று கூடி வழிமறித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதன் பின்னர், உரிய கால அவகாசம் கேட்டு 10 வீடுகளை சேர்ந்தவர்கள், அதிகாரிகளிடம் கடிதம் அளித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் வீடுகளுக்கு சீல் வைக்கும் தங்களது முயற்சியை தற்காலிகமாக கைவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்