கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் தொடங்கி வைக்கிறார்

மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.

Update: 2023-09-02 02:57 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்ட தொடக்க விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்விமோகன், காஞ்சீபுரம் எம்.பி.க.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.எம்.சுதாகர், மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு விழா நடைபெறும் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களுக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை மற்றும் சுகாதாரத்துறை போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளின் விவரம் குறித்து கேட்டறிந்தார்.

போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படாத வகையில் சிறப்பு விருந்தினர்கள் வரும் வழியை ஏற்படுத்தி தருமாறு போலீசாருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் விழா நடைபெறவுள்ள காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாட்டு பணிகளை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது. முன்னாள் முதல்-அமைச்ச்சர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ந்தேதி காஞ்சீபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினே நேரில் வந்து திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார்.

காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் விழா காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளதால் விழா நடைபெறும் இடத்தை தேர்வு செய்து மேடை அமையவுள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செல்வக்குமார், மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்