செயற்கை முறையில் பழுக்க வைக்கும் மாம்பழங்கள்; டாக்டர், வியாபாரிகள் கருத்து
செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைப்பது குறித்து டாக்டர், அதிகாரி, வியாபாரி கருத்து தெரிவித்துள்ளனர்.
முக்கனிகளில் முதன்மையானது மாங்கனி. அதன் இனிய சுவை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் வாயில் எச்சில் ஊறச் செய்துவிடும்.
மருத்துவக் குணம்
நமது உடலுக்கு முக்கியத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மாம்பழத்தில் அதிகமாகக் கிடைக்கிறது. அதில் பொட்டாசியம் மற்றும் நார்சத்து மிகுந்திருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.
இப்படிப்பட்ட சத்தும், சுவையும் மிகுந்த மாம்பழச் சீசன் தொடங்கினால் போதும், ஒரு பிரச்சினையும் கூடவே சேர்ந்து வருகிறது. ரசாயனங்களால் பழுக்கப்பட்ட மாம்பழங்கள் தான் அந்த பிரச்சினைக்கு காரணம். குறுகிய காலத்தில் லாப நோக்கத்தில் ரசாயன கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் விற்பனை அதிகரித்து வருவதால், மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டுபிடிக்கவும், அதனை தடை செய்யவும் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
செயற்கை முறையில்...
இதுகுறித்து திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி கலைவாணி கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் கார்பைடு கல் மற்றும் எத்திலின் ஸ்பிரே மூலம் மாம்பழங்களை பழுக்க வைப்பது அதிகரித்து வருகிறது. இப்படி செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை சாப்பிடும்போது வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். தொடர்ந்து இதுபோன்ற பழங்களை சாப்பிடுவதால் அல்சர், புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே மாம்பழங்களை வாங்கும் போது சில வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். அதாவது இயற்கையாக மாம்பழங்கள் பழுக்கும் போது அடிப்பகுதியில் இருந்து தான் பழுக்க தொடங்கும். மாம்பழங்களின் காம்பு பகுதி பெரும்பாலும் மஞ்சள் நிறமாக இருக்காது. கார்பைடு கல், எத்திலின் ஸ்பிரே மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அனைத்து பகுதியிலும் பளீர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் என்றால் அதன் மணம் காற்றில் கலந்து வீசும். ஆனால் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மணம் வீசாது.
வியாபாரிகளுக்கு அபராதம்
அதேபோல் நல்ல மாம்பழங்களை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடும். ஆனால் செயற்கையாக பழுக்க விடப்பட்ட மாம்பழங்கள் தண்ணீரில் மூழ்காமல் மிதக்கும். எனவே பொதுமக்கள் மாம்பழங்களை வாங்கும் போது கவனமுடன் வாங்க வேண்டும். தேர்வு செய்து வாங்கி வரும் மாம்பழங்களை சுமார் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தண்ணீரில் போட்டு வைக்கலாம். முடிந்தவரை தோல் நீக்கி மாம்பழங்களை சாப்பிடுவது நல்லது.
திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள சாலையோரங்களில் தற்காலிக மாம்பழ கடைகள், பழக்கடைகள் ஆகியவற்றில் அவ்வப்போது ஆய்வு நடத்தப்படும். அப்போது கார்பைடு கல், எத்திலின் ஸ்பிரே மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால் அவற்றை பறிமுதல் செய்து அழித்துவிடுவோம். மேலும் வியாபாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்படும். தொடர்ந்து இதே போன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டால் அவர்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் சட்டப்படி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இதுதவிர நல்ல மாம்பழங்களை தேர்வு செய்து வாங்குவது எப்படி? என்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கார்பைடு கல் மூலம் மாம்பழங்களை பழுக்க வைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
நடவடிக்கை எடுக்க வேண்டும்
சையது அபுதாகிர் (பழ வியாபாரி, திண்டுக்கல்:- திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு சீசன் காலத்தில் மாம்பழங்கள் வரத்து அதிகமாக இருக்கும். அவை அனைத்தும் கார்பைடு கல் அல்லது எத்திலின் ஸ்பிரே மூலம் பழுக்க வைக்கப்பட்டது என்று கூறி விட முடியாது. எங்களுக்கும் மக்களின் ஆரோக்கியம் மீது அக்கறை உள்ளது. மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படும் மாம்பழங்களில் நல்ல பழங்களை தேர்வு செய்து வாங்கி தான் கடைகளில் வைத்து விற்பனை செய்கிறோம்.
கோமதி ராஜரத்தினம் (மாம்பழ பிரியை, ஒத்தக்கண்பாலம்):- இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் தான் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். அதனால் நாம் பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது மாம்பழங்களை தான். அதனால் தான் சீசன் தொடங்கியதும் மாங்காய், மாம்பழ விற்பனை படுஜோராக நடக்கிறது. எனவே செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் விற்கப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயற்கை முறையே சிறந்தது
டாக்டர் இலக்கியா (சிறுகுடி):- மா, பலா, வாழை ஆகியவற்றை முக்கனிகள் என்று அழைப்பார்கள். இதில் மாம்பழத்துக்கு கோடை காலத்தில் சீசன் இருக்கும். இதனால் மக்கள் அந்த பழங்களை விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள். பொதுவாக மாம்பழங்கள் தானாக பழுக்க வேண்டும். சிலர் அவற்றை அரிசி டாப்பாவில் போட்டும், வைக்கோல் மீது போட்டும் பழுக்க வைப்பார்கள். இந்த முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு ஒன்றும் ஆகாது.
ஆனால் லாப நோக்கில் சிலர் மாம்பழங்கள் செங்காயாக இருக்கும் போதே அதை பழுக்க வைக்க கார்பைடு கல், எத்திலின் ஸ்பிரே ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். இந்த முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை சாப்பிடுபவர்களுக்கு தீராத வயிற்று வலி, வாந்தி, மயக்கம், நாவில் நீர்வறட்சி, நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படும். எனவே இயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களே சிறந்தது. அவற்றை சாப்பிடுவதுதான் ஆரோக்கியமான வாழ்வை நமக்கு கொடுக்கும்.
நிரந்தர தீர்வு வேண்டும்
மீனா (குடும்பத்தலைவி, அடைக்கனூர்):- மாம்பழ சீசன் தொடங்கிவிட்டாலே கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு, கிலோ கணக்கில் செயற்கையாக பழுக்கை வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பு என்ற செய்தி தான் பரவுகிறது. ஆனால் அவ்வாறு மாம்பழங்களை பழுக்க வைக்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிரந்தர தீர்வு இதுவரை கிடைக்கவில்லை.
நாம் எவ்வளவு கவனமுடன் மாம்பழங்களை பரிசோதித்து வாங்கிச்சென்றாலும் நம் கண்களையும் மறைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சிலர் நம்மிடம் விற்றுவிடுகின்றனர். இதனால் நமது குடும்பத்தினரின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு அரசு நிரந்தர தீர்வு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.