போலீஸ் உயர் அதிகாரி என்று கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது

சென்னை வளசரவாக்கம் அருகே போலீஸ் உயர் அதிகாரி என்று கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-30 06:17 GMT

வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). இவர் கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர்கள் மூலம் கடந்த 2016-ம் ஆண்டு கே.கே.நகரை சேர்ந்த பாலாஜி (60), என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். அப்போது பாலாஜி சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் உதவி கமிஷனராக இருப்பதாகவும், தனக்கு உயர் அதிகாரிகள் பலரை தெரியும் என்று விஜயகுமாரை நம்ப வைத்துள்ளார்.

இந்த நிலையில் விஜயகுமார் தனது தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்று வங்கியில் கடன் வாங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்ததை அறிந்த பாலாஜி தனக்கு வங்கி உயர் அதிகாரிகளை தெரியும் என்றும் கடன் வாங்கி தருவதாகவும் கூறி விஜயகுமாரிடம் ரூ.10 லட்சம் வரை பணம் வாங்கி ஏமாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், கொடுத்த பணத்தை விஜயகுமார் திருப்பி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதுடன் விஜயகுமாரை துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று கூறி பாலாஜி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விஜயகுமார் ராமாபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், ராமாபுரம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து போலீஸ் என்று கூறி மோசடியில் ஈடுபட்ட பாலாஜியை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்