விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.
ஊட்டி
இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.
தற்கொலை
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே பார்சன்ஸ்வேலி பகுதியை சேர்ந்தவர் ஜித்து என்ற இந்திரஜித். இவர் 23 வயது இளம்பெண்ணுடன் பழகி வந்தார். இது காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் இந்திரஜித்துக்கு அதே பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த காதலி, தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி இந்திரஜித் ஏமாற்றி விட்டதாக கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பைக்காரா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
பிடிவாரண்டு
இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டுதல், திருமண ஆசை காட்டி ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, இந்திரஜித்தை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினீல் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த 7 ஆண்டுகளாக ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதற்கிடையே பைக்காரா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வெங்கடேசன் பணி மாறுதலாகி வெளியூர் சென்று விட்டார். இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த 14 மாதங்களில் இதுவரை 27 முறை அழைப்பு விடுத்தும் அவர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதரன் நேற்று இன்ஸ்பெக்டர் வெங்கடேசனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். வெங்கடேசன் தற்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.