ஆட்டோவில் சாராயம் கடத்தியவர் கைது

குடியாத்தம் அருகே ஆட்டோவில் சாராயம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-27 13:48 GMT

குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் மற்றும் பூங்குளம் பகுதிகளில் இருந்து லாரி டியூப்களில் சாராயம் கடத்தப்படுவதாக வந்த புகார்களின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின்படி, குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாலுகா இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் அடுத்த அக்ராவரம் பஸ்நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது ஆட்டோவில், லாரி டியூப்களில் சாராயத்தை அடைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து ஆட்டோவை ஓட்டிவந்த அக்ராவரம் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் (வயது 35) என்பவரிடம் விசாரணை நடத்தியதில் பூங்குளம் பகுதியைச் சேர்ந்த செம்மட்ட சரவணன் என்பவர் சாராயம் காய்ச்சுவதாகவும், அவர் கூறியதன் பேரில் கே.வி.குப்பம் பகுதி சாராய வியாபாரி ஒருவருக்கு 150 லிட்டர் சாராயத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து செம்மட்ட சரவணன் மற்றும் ஆட்டோ டிரைவர் சிவகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவகுமாரை கைது செய்து, ஆட்டோ, சாராயத்தை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்