மொரப்பூர்:
பொம்மிடி அருகே உள்ள ஜங்காளப்பட்டியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 35). தொழிலாளி. இவருடைய மனைவி வைத்தீஸ்வரி (28). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் காமராஜ் தனது மனைவியை தாக்கினாராம். இதையடுத்து வைத்தீஸ்வரியை அவரது தாயார் மகேஸ்வரி அழைத்துக் கொண்டு தன்னுடன் வைத்துக் கொண்டார். குடும்ப வறுமை காரணமாக வைத்தீஸ்வரி கடத்தூரில் உள்ள ஒரு மருந்தகத்துக்கு வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வைத்தீஸ்வரி வேலை செய்யும் மருந்தகத்துக்கு சென்ற காமராஜ் மனைவி வைத்தீஸ்வரியை கத்தியால் தாக்கினார். இதில் காயம் அடைந்த வைத்தீஸ்வரி தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வைத்தீஸ்வரியின் தாயார் மகேஸ்வரி கடத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் வழக்குப்பதிவு செய்து காமராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.