மொரப்பூர் அருகேகருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்த 3 பேர் கைது

Update: 2023-03-26 19:00 GMT

மொரப்பூர்:

மொரப்பூர் அருகே கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

குழந்தையின் பாலினம்

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள வகுத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவருடைய மனைவி சாக்கம்மாள் என்கிற புனிதவதி (வயது 56). இவர் தர்மபுரி அருகே உள்ள பாளையம்புதூர் அரசு மருத்துவமனையில் ஆயாவாக வேலை பார்த்து வந்தார். இவர் கொரோனா காலத்தில் பணியில் இருந்து நின்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆயாவாக வேலை பார்த்தபோது அந்த பகுதியில் உள்ள ஒரு சிலரை கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவரிடம் அழைத்து சென்று கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்ன கண்டறிந்து கூறியுள்ளார். இதையடுத்து முருகேசன் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி சேசசமுத்திரம் பகுதியில் மெடிக்கல்ஸ் வைத்து நடத்தி வந்த செல்வமணி மகன் கவியரசன் (28) என்பவர் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கவியரசனுக்கும் சாக்காம்மாளின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

கைது

இந்த நிலையில் ஒரு பெண் தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை அறிய ஸ்கேன் செய்து கூறுமாறு சாக்கமாளிடம் கேட்டுள்ளார். இதையடுத்து கவியரசன், அவருக்கு உதவியாக வந்த கள்ளக்குறிச்சி சங்கராபுரம் பகுதியை சேர்ந்த அய்யனார் (34) ஆகியோர் வகுத்தானூரில் உள்ள சாக்கம்மாள் வீட்டிற்கு வந்தனர்.

பின்னர் தாங்கள் கொண்டு வந்த கருவி மூலம் பாலினத்தை அறியும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மருத்துவ துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அரூர் வட்டார அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணா தலைமையில் மருத்துவ குழுவினர் வகுத்தானூரில் சாக்கம்மாள் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கு குழந்தையின் பாலினத்தை கண்டறியும் மொபைல் ஸ்கேனர் வைத்து பரிசோதனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேஷ் கண்ணா மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரோஜா வழக்குப்பதிவு செய்து கவியரசன், அய்யனார் மற்றும் சாக்கம்மாள் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்