மேற்கூரையை பிரித்து கடைக்குள் இறங்கி திருடிய வாலிபர் கைது
மேற்கூரையை பிரித்து கடைக்குள் இறங்கி திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஓமலூர்:
ஓமலூர் அடுத்த நாச்சினம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 48) எல்.ஐ.சி. முகவரான இவர் நாச்சினம்பட்டி பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு பிரபாகரன் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை பிரபாகரன் கடையை வந்து திறந்த போது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு உள்ளே புகுந்த மர்ம நபர் கடையின் டேபிளில் வைத்திருந்த ரூ.12 ஆயிரத்தை திருடி சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பிரபாகரன் தீவட்டிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். தொடர்ந்து பேன்சி ஸ்டோர் அருகில் உள்ள கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில் நாச்சினம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் மகன் கவின் (21) என்பவர் பேன்சி ஸ்டோரின் மேற்கூரை அட்டையை பிரித்து கடைக்குள் புகுந்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து கவினை போலீசார் கைது செய்தனர்.