ஜேடர்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதி விவசாயி பலி டிரைவர் கைது

Update: 2022-12-19 18:45 GMT

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதி விவசாயி பலியானார். குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

விவசாயி

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 45). விவசாயி. இவர் நேற்று காலை ஜேடர்பாளையத்தில் மீன் வாங்கி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் கபிலர்மலை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு‌ பகுதியில் வந்தபோது, கபிலர்மலையில் இருந்து ஜேடர்பாளையம் நோக்கி பால் ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு ஆட்டோ ஒன்று தாறுமாறாக சென்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சோமசுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததால், பால்‌ கேன்கள் சாலையில் விழுந்தன. இதனால் சாலையில் பால் ஆறாக ஓடியது. சரக்கு ஆட்டோவில் வந்த டிரைவர் குணசேகரனை அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் மீட்டனர்.

டிரைவர் கைது

அப்போது குணசேகரன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்த சோமசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மது போதையில் சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சோழசிராமணியை சேர்ந்த குணசேகரனை (30) போலீசார் கைது செய்தனர். இந்த விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான சோமசுந்தரத்திற்கு லோகேஸ்வரி என்ற மனைவியும் தர்சிகா (18) என்ற மகளும், தினேஷ் (13) என்ற மகனும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்