தீபாவளி சிறப்பு பஸ்கள்: எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து இயக்கப்படுகிறது..? - அமைச்சர் தகவல்

தீபாவளி பண்டிகையையொட்டி மொத்தமாக 14 ஆயிரத்து 086 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-21 07:40 GMT

சென்னை,

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் 31ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பாக தலைமை செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் போக்குவரத்து கூடுதல் செயலாளர் உள்ளிடோர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சிவசங்கர், "தீபாவளியையொட்டி வரும் 28-ம்தேதி முதல் 30-ம் தேதி வரை சிறப்பு பஸ்களை இயக்கப்பட உள்ளது. 3 நாட்களில் சுமார் 5.83 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தமாக 14 ஆயிரத்து 086 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 92 பஸ்களுடன் சேர்த்து 11 ஆயிரத்து 176 பஸ்களும், பிற மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்து 910 பஸ்களும் என மொத்தமாக 14 ஆயிரத்து 086 பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பண்டிகைக்கு பின் நவம்பர் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை சென்னை திரும்ப வசதியாக 9 ஆயிரத்து 441 பஸ்களும், பிற பகுதிகளுக்கு செல்ல 3 ஆயிரத்து 165 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 606 பஸ்களை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது

சென்னை கே.கே. நகரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கும் திட்டமில்லை. கோயம்பேட்டில் இருந்து மாதவரம், கிளாம்பாக்கத்திற்கு 24 மணி நேரமும் இணைப்பு பஸ்கள் இயக்கப்படும். பயணிகள் வசதிக்காக 24 மணி நேர கட்டுப்பாடு அறை இயங்கி வருகிறது. 94450 14436 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயணிகள் விவரம் அறியலாம். புகார் அளிக்கலாம். தேவைக்கேற்ப தனியார் பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.

எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பஸ்கள் இயக்கம்

கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

புதுச்சேரி, திருச்சி, மதுரை, நெல்லை, திருவண்ணாமலை, தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி ஆகிய இடங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஆந்திரா, சேலம், கும்பகோணம், திருச்சிக்கு மாதவரத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கார்களில் சொந்த ஊர்கள் செல்வோர் கவனத்திற்கு

கார்கள் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். திருப்போரூர்-செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்- புகார் அளிக்கலாம்

தீபாவளி சமயத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

1800 425 6151

044-24749002

044-26280445

044-26281611

Tags:    

மேலும் செய்திகள்