சென்னை மெரினாவில் போலீசாரிடம் தரக்குறைவாக பேசிய விவகாரம் - இருவரிடம் விசாரணை

போலீசாரிடம் தரக்குறைவாக பேசிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-10-21 11:26 GMT

சென்னை,

சென்னை மெரினா லூப் சாலையில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்தது. காரில் ஒரு ஆண் மற்றும் பெண் இருந்தனர். இருவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் கடற்கரையை நோக்கி செல்ல முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கடற்கரைக்கு செல்ல தற்போது அனுமதி இல்லை என்றும், இங்கிருந்து செல்லுமாறும் கூறினர்.   

அப்போது அவர்கள் இருவரும் போலீசாரை தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளனர். குறிப்பாக, காவலர்களை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். இருவரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் தரக்குறைவாக பேசியதை போலீசார் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையடுத்து, தரக்குறைவாக பேசியவர்கள் மீது காவலர் சிலம்பரசன், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆபாசமாக பேசுதல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களின் கார் பதிவு எண்ணை வைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தரக்குறைவாக பேசிய நபர் வேளச்சேரியை சேர்ந்த சந்திரமோகன் என்பதும், அவரது தோழி மயிலாப்பூரை சேர்ந்த தனலட்சுமி என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில், இருவரையும் துரைப்பாக்கத்தில் போலீசார் தற்போது பிடித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின்போது அவர், தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினார். இதனை காவல் துறை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்