தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

Update: 2024-10-21 06:27 GMT

கோப்புப்படம்

சென்னை,

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் 31ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி வியாழக்கிழமை வருகிறது. தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் மாணர்கள், பொதுமக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

பண்டிகை காலங்களில் ஆண்டு தோறும் மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என அறிவிப்பு வெளியாகமல் இருந்தது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பாக தலைமை செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் போக்குவரத்து கூடுதல் செயலாளர் உள்ளிடோர் பங்கேற்றனர்.

அதில் எத்தனை சிறப்பு பஸ்களை இயக்குவது, சென்னையில் இருந்து மற்றும் பிற கோட்டங்களில் இருந்து எத்தனை பஸ்களை இயக்குவது, எந்தெந்த ஊர்களுக்கு எந்த பகுதிகளில் இருந்து பஸ்களை இயக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தீபாவளியையொட்டி வரும் 28-ம்தேதி முதல் 30-ம் தேதி வரை சிறப்பு பஸ்களை இயக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக 14 ஆயிரத்து 086 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து 11 ஆயிரத்து 176 பஸ்களும், பிற மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்து 910 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை சென்னை திரும்ப வசதியாக 9 ஆயிரத்து 441 பஸ்களை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வண்டலூரில் அரசு பஸ்களை நிறுத்த தனியாக பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 3 நாட்களில் சுமார் 5.83 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்