தனியார் நிறுவன ஊழியரின் மோட்டார் சைக்கிளை திருடிய ரவுடி கைது-போலீசாரின் வாகன சோதனையில் சிக்கினார்

Update: 2022-09-29 18:45 GMT

ஓசூர்:

ஓசூரில் தனியார் நிறுவன ஊழியரின் மோட்டார் சைக்கிளை திருடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளிகள் 3 பேரை தேடி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

ஓசூர் பேடரப்பள்ளி அருகே உள்ள ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர்கள் சிலர் திருடி சென்றனர். இதுகுறித்து மணிகண்டன் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் சிப்காட் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

கொலை வழக்கு

இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரனை நடத்தினர். அதில் அவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா படமத்தூர் அருகே உள்ள மத்தூரை சேர்ந்த ரஞ்சித் (23) என்பதும், மணிகண்டனின் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இவர் மீது திருப்பாச்சி போலீஸ் நிலையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஒரு கொலை மற்றும் வெடிபொருட்கள் தடை சட்ட வழக்கு ஆகியவை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், தனது கூட்டாளிகளான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (27), ரித்தீஷ் (24), சிவமணி (24) ஆகியோருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளை திருடியதாக ரஞ்சித் தெரிவித்தார்.

ரவுடி கைது

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி ரஞ்சித்தை கைது செய்தனர். மேலும் அவருடைய கூட்டாளிகளான மணிகண்டன், ரித்தீஷ், சிவமணி ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்