கிருஷ்ணகிரி மாவட்டத்தில்லாட்டரி சீட்டு, குட்கா விற்ற 12 பேர் கைதுசூதாடியதாக 8 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி, குட்கா விற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சூதாடியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லாட்டரி, குட்கா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் லாட்டரி சீட்டு விற்ற தேன்கனிக்கோட்டை பைபாஸ் சாலையை சேர்ந்த நியாமதுல்லலா (வயது 62), கெலமங்கலம் அண்ணா நகர் ராஜா (44), கொப்பகரை அருகே உள்ள கோனேரி அக்ரஹாரம் கோவிந்தராஜ் (43) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.950 மதிப்புள்ள லாட்டரி சீட்டுக்கள் மற்றும் ரூ.750 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் குட்கா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் சோதனை செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.970 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
சூதாட்டம்
மேலும் மாவட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அதன்படி தளி போலீசார் கல்கேரி கிராமம் அருகே ரோந்து சென்ற போது அங்கு பணம் வைத்து சூதாடிய எஸ்.குருப்பட்டி வெங்கடேஷ், கலுகொண்டப்பள்ளி மஞ்சுநாத் (40), பிரகாஷ் (43), காலேனட்டி லோகேஷ், தளி சேத்தன்குமார் (26), சத்யராஜ் (26) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரத்து 650 பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் சிப்காட் போலீசார் சிப்காட் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பாரதி நகர் சுப்பிரமணி (40), தொட்டூர் ராஜா (37) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.200 பறிமுதல் செய்யபட்டது.