பெரியாரின் நூல்களை 21மொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெரியாரின் நூல்களை 21 மொழிகளில் கொண்டு வருவதற்கான முன்னெடுப்பை எடுத்து வருகிறோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை தி.நகரில் எழுத்தாளர் மா.நன்னன் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது;
"மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். பல்லாயிரம் பக்கங்களை எழுதி குவித்திருக்கக்கூடிய எழுத்தாளர் நன்னனில் விரலுக்கு விழுப்புரத்தில் நடைபெற்ற இளைஞரணி பாசறை கூட்டத்தில் மோதிரம் அணிவித்தவன் நான். அதனை இன்றும் பெருமையாக நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
அவர் மறைந்த பிறகும், புத்தகம் அவரது பெயரால் வெளிவந்துகொண்டிருக்கிறது. அப்படியென்றால், எழுத்தால், சிந்தனையால், செயலால் அவர் வாழ்கிறார்.124 புத்தகங்களை நமக்காக அவர் உருவாக்கியுள்ளார்.
புலவர் நன்னன் எழுதிய 124 புத்தகங்கள் நாட்டுடமையாக்கப்படும். பெரியாரை போலவே நன்னனும் 90 வயது வரை வாழ்ந்தவர். அவருடன் கூட இருப்பவர் சும்மா இருக்க விட மாட்டார், ஏதேனும் செய்து கொண்டே இருக்க வேண்டும் என கூறுவார்.பெரியாரின் நூல்களை 21 மொழிகளில் கொண்டு வருவதற்கான முன்னெடுப்பை எடுத்து வருகிறோம். பிற மாநிலத்தவர்கள் நாம் மாநிலத்தில் ஓர் பெரியார் இல்லையே என்று கூறுகின்றனர்." என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.