பல்லாவரம் ஏரியை சுத்தப்படுத்திய ராணுவ வீரர்கள்

:உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, 12வது பட்டாலியன் ராணுவ வீரர்கள், பல்லாவரம் பெரிய ஏரியை இரு நாட்களாக சுத்தம் செய்தனர்.

Update: 2023-06-05 09:35 GMT

நீர் நிலைகளை பாதுகாக்க சென்னையில் உள்ள தென்மண்டல ராணுவ தலைமை அலுவலகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சென்னையை அடுத்த பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள பல்லாவரம் பெரிய ஏரியை சுத்தப்படுத்தும் பணி கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இந்த பணியில் ஏராளமான ராணுவ வீரர்கள், படகுகள் மூலம் ஏரியில் பரந்து விரிந்து கிடந்த ஆகாயத்தாமரை செடிகளையும், குப்பைகளையும் அகற்றி ஏரியை சுத்தப்படுத்தினர். என்.சி.சி. மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது நீர்நிலைகளை பாதுகாக்கவும், மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கவும், பசுமையை மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வோம் என ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்தநிலையில் நேற்று ராணுவ அதிகாரி கரன்பீர் சிங் பிரான், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா ஆகியோர் சுத்தம் செய்யப்பட்ட ஏரியை நேரில் பார்வையிட்டனர். பின்னர் ஏரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டவர்களை பாராட்டி பரிசு வழங்கியதுடன், ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்